தாயம் ஆடித் தோற்று மனைவி மானபங்கப்படுவதற்குக் காரணமாயிருந்தார். அப்புறம் போர்க்களத்தில் அசுவத்தாமன் என்ற யானை கொல்லப்பட்டதை, அசுவத்தாமன் கொல்லப்பட்டுவிட்டான் என உரக்கச் சொல்லி, அப்புறம் மேலுக்கு அது யானை என்று மெல்லச் சொல்லி துரோணாச்சாரியாரை செயலிழக்கவைத்து, அவரது தலையை திருஷ்டத்யும்னன் கொய்ய வழிசெய்தார்.
இந்த இரு பெரும் தவறுகளைத் தவிர சொந்த அளவில் யுதிஷ்டிரர் மிக நேர்மையானவர், அறநெறிப்படியே நடந்தவர் என்பதே பொதுவான புரிதல்.
ஆனாலும் அவரிடம் பல்வேறு முரண்பாடுகள், குறைபாடுகள் உண்டு. கர்ணன் இறந்த பிறகே தாய் குந்தி தேவிக்கு முதல் முதலாகப் பிறந்தவன், அப்போது திருமணமாகாத நிலையில், குந்தி ஆற்றில் விட்டுவிட்டாள் என்பது பாண்டவர்களுக்குத் தெரியவருகிறது. ஷத்திரிய முறைப்படி கர்ணனுக்கு ஈமச் சடங்குகள் செய்யவேண்டும் என குந்தி கூறும்போதுதான் சஸ்பென்ஸ் முடிச்சு அவிழ்கிறது.
அப்போது தர்மர் என்ன சொல்கிறார் தெரியுமா – அய்யய்யோ முதலிலேயே சொல்லாமல் விட்டுவிட்டீர்களே…அவன் நம் பக்கம் இருந்திருந்தால் யாருமே நம்மை வென்றிருக்கமுடியாதே, இத்தனை அழிவை சந்தித்திருக்கவேண்டாமே?
அது மட்டுமல்ல பெண்கள் எந்த ரகசியத்தையும் காப்பாற்றவியலாது என சபிக்கவும் செய்கிறார்.
எப்படி கர்ணன் தன் வாழ்விழந்தது, பாண்டவர்களில் ஒருவனாக கருதப்படாதது, இறுதிவரை ஷத்திரியனாக அங்கீகரிக்கப்படாமல், தேரோட்டி மகனாகவே மரணித்தது, இந்த அவலம் எதுவுமே நம் தர்மிஷ்டரை பாதிக்கவில்லை. போரில் இவ்வளவு அழிவு இருந்திருக்கவேண்டாமே என்று மட்டும்தான் அவர் நினைக்கிறார்.
அதே போல் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியும் மேரு மலை ஏறி நேரடியாக சுவர்க்கம் செல்லலாம் என முடிவெடுத்து பயணிக்கையில், ஒருவர் பின் ஒருவராக வழியிலேயே மரிக்கின்றனர். திரௌபதி வீழ்கையில் பீமன் அண்ணா, இங்கே பாருங்கள் திரௌபதியும் எனப் பதறியபோது, ”என்ன செய்ய அவள் நம் அனைவருக்கும் மனைவியென்றாலும், அர்ஜூனன் மீதுதான் அளவு கடந்த காதல், எனவேயே உயிருடன் அவளால் சுவர்க்கம் புகமுடியாமல் போய்விட்டது,” எனத் திரும்பிப்பார்க்காமல் நடக்கிறார்.
இந்தப் பின்னணியில்தான் அவர் மரணப்படுக்கையில் பீஷ்மர் இருக்கையில் அவர் கேட்கும் கேள்விகளை நாம் பார்க்கவேண்டும். பீஷ்மரின் விடையாகப் பதிலாகப் பல கதைகள். அவற்றில் சிலவற்றைத் தான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
பெண்களைப் பற்றிய மௌடீகமான கருத்துக்கள் அவ்வினா-விடைகளில் வெளிப்படுகின்றன.
எப்படிப் பெண்களைக் கட்டுப்படுத்துவது? அவர்கள் உண்மையைப் பொய்யென்றும், பொய்யை உண்மையென்றும் சாதிக்கின்றனரே என வினவுகிறார் யுதிஷ்டிரர்.
பீஷ்மர், “என்ன சொன்னாலும் சரி, தண்டனையளித்தாலும் சரி, கொன்றுபோட்டாலும் சரி அவர்கள் மாறப்போவதில்லை. அது அவர்களைப் படைத்த பிரம்மாவாலேயே இயலவில்லை,” என்கிறார்.
மகரிஷி தேவசர்மாவின் மனைவி ருசி. பேரழகி. உலகே அவளைக் கண்டு மயங்கியது. இந்திரன் விடுவானா? ரிஷிக்கோ தவம் செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால் இந்திரன் என்ன செய்வானோ என்ற கலக்கம். சீடன் விபுலனிடம் அப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நகர்ந்துவிடுகிறார் சர்மா. அவன் எந்த வேடத்திலும் வருவான். எச்சரிக்கையாயிரு என்று மட்டும் சொல்கிறார்.
எப்படிக் காப்பாற்றினாலும் இந்திரன் விடப்போவதில்லை. ருசி எந்த நேரத்தில் மனம் மாறக்கூடும் எனக் கணிக்க இயலாது. அகலிகை கதை போல ஏதாவது எசகு பிசகாக நடந்த்துவிட்டால் குரு தன்னையே சபித்துவிடக்கூடும், என்ன செய்வது எனக் கலங்கிய சீடன் ஒரு யுக்தியைக் கண்டுபிடிக்கிறான். தன் தவ வலிமையால் குரு பத்னியின் உடலுக்குள்ளேயே புகுந்துவிடுகிறான்.
இந்திரன் வருகிறான். தன்னையும் மீறி ருசி மயங்குகிறாள். ஆனால் விபுலன் அவளைக் கட்டுப் படுத்துகிறான். பின் வெளியே வந்து இந்திரனை ஏசி விரட்டிவிடுகிறான்.
திரும்பிய குருவிடம் பங்கம் ஏதும் நேரவில்லை என வலியுறுத்துகிறான் விபுலன். அவருக்கும் பரம சந்தோஷம்.
ஆனால் சிக்கல் தீரவில்லை. குருவிடம் தான் ருசியில் உடலில் புகுந்தே காப்பாற்ற முடிந்தது என்ற உண்மையினைச் சொல்லவில்லையே. அதனாலேயே அவனுக்கு சாபம் உண்டு என்பதைப் பின்னால் உணரும் விபுலன் முனிவரிடம் சென்று மன்னிப்பு கோருகிறான். அவரும் பெருந்தன்மையுடன் மன்னிக்கிறார். ஆனால் குருவிடம் எதையும் மறைக்காதே என்று மட்டும் நினைவூட்டுகிறார்.
மயங்கிய ருசிக்கு நல்ல வேளையாக சாபம் எதுவும் இடப்பட்டதாகத் தெரியவில்லை!
2. கலவியில் அதிக இன்பம் பெறுவது ஆணா, பெண்ணா? யுதிஷ்டிரரின் இன்னொரு கேள்வி:
விடை மீண்டும் இந்திரனின் லீலா வினோதம் வழியே. பங்காஸ்வனா எனு,ம் அரசன் யாகம் செய்து அக்னிக்கு அனைத்தையும் அர்ப்பணிக்கிறான். அவனுக்குப் நூறு குழந்தைகள் பிறக்கின்றன. அவை தன்னைவிடவும் வலிமை பெற்றவர்களாகிவிடலாம் எனக் கவலையுறும் இந்திரன், தகப்பனை தண்டிப்பதற்காக அவனை பெண்ணாகவே மாற்றிவிடுகிறான். ராஜ்ஜியத்தை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு வனம் ஏகுகிறான் அரசன்.
(அதனாலென்ன பிள்ளைகள் வலிமையை எப்படிக் குறைக்கமுடியும் என்றெல்லாம் கேட்கவேண்டாம். மகாபாரதம் அப்படிக் கூறுகிறது, நமக்கு எடுத்துச் சொல்கிறார் வெண்டி டானீகர். அதை நான் உங்களுக்கு.)
பெண்ணாகியும் சளைக்கவில்லை. மேலும் நூறு பிள்ளைகள்! அவர்களையும் ஆணாக இருந்தபோது தான் பெற்றவர்களிடம் ஒப்படைத்து, இவர்கள் உங்கள் சகோதரர்களே, ஒற்றுமையாக இருந்து ராஜ பரிபாலனம் செய்யுங்கள் என்கின்றாள் பங்காஸ்வனி.
இந்திரன் அவர்களுக்குள் கலகமூட்ட ஒரே ரத்தக் களரி. பங்காஸ்வனி துயருறுகிறாள். பிறகு இந்திரனே வந்து ஆறுதல் சொல்ல தேவர்களின் தலைவனைப் புறக்கணித்து,யாகம் பங்காஸ்வனன் யாகம் வளர்த்தது தவறு என சுட்டிக்காட்டுகின்றனர். அரசன்/சி ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க, அப்போது இந்திரன், “சரி மன்னித்தோம்…ஆனால் 200 பேரில் எந்த நூறு பேரை நீ விரும்புகிறாய்? அவர்கள் மட்டுமே உயிர்வாழ ஆசிர்வதிப்பேன்,” என்கிறார்.
நான் பெண்ணாக மாறிய பிறகு பெற்றவர்களைத்தான் என்கிறார் பங்காஸ்வனி.
“ஏன் அப்படி?”
“நான் பெண்ணான பிறகு கலவியில் கூடுதல் இன்பம் காண்கிறேன்..”
அப்படியே ஆகுக!
தர்ம பிரபு பெண்கள் நேர்மையாகவே இருப்பதில்லை, இருக்கமாட்டார்கள் என வேதங்கள் கூறுகின்றன. ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் பொதுவான தர்மம் இருப்பதாகவும் அவை சொல்லும். அது எப்படி என வினவுகிறார்.
அஷ்டாவக்கிரன் எனும் பிராமண இளைஞனுக்கு சுபிரபா எனும் பெண் மீது மாளாக் காதல். ஆனால் அவரது தந்தை ‘நீ வடக்கே சென்று, இமயமலையைத் தாண்டி வாழும் ஒரு மூதாட்டியை சந்தித்து அவரது ஆசி பெற்று வா, அப்போதுதான் உனக்கு என் மகள்.’ எனக் கூறிவிடுகிறார்.
அவலட்சணமாயிருக்கும் அப்பெண்மணியோ அஷ்டாவக்கிரனுடன் உடலுறவு கொள்ளத் துடிக்கிறார். இளைஞன் உறுதியாக மறுக்கிறார். முறைதவறி உறவில் ஈடுபடமாட்டேன் என்கிறார்.
பிறகு அப்பெண்மணியே ஒரு தேவதையாக வடிவெடுத்து சோதனையில் வென்றுவிட்டாய், நீ இப்போது முனிவரிடம் சென்று இங்கு நடந்ததையெல்லாம் சொல்லலாம். தனது மகளை உனக்கு மணமுடிப்பார் என ஆசி கூறி அனுப்பிவைக்கிறார்.
அதன்படியே முனிவரும் மனம் மகிழ்ந்து திருமணம் செய்துவைக்கிறார். அஷ்டாவக்கிரன் நடந்ததாகச் சொல்லும் அனைத்தும் நடந்ததா, ஏமாற்றுகிறாரா என்பது அத் தந்தைக்கு எப்படித் தெரியும்? மகாபாரதம் சொல்லவில்லை.
அது போக பெண்களைத் தொடர்ந்து சந்தேகிக்கும் தர்மராஜாவின் கேள்விக்கு மூதாட்டி அஷ்டாவக்கிரனை பரிசோதிப்பதற்காக செய்வதெல்லாம் எப்படி விளக்கமாகும்?
அகலிகை
கணவன் வடிவத்தில் தோன்றி இந்திரன் அகலிகையை தன் வசப்படுத்தியதும் பின்னர் கல்லாகுமாறு சபிக்கப்பட்டதும் ராமபிரானின் கருணையினால் புத்துயிர் பெற்றதும் நாமறிந்த கதை.
பல்வேறு விதமாக இக் கதை கூறப்படுகிறது. அகலிகை பிரம்மா படைத்த மிக அழகிய பெண். திருவிளையாடல் சிவன் போன்று உலகத்தை யார் முதலில் சுற்றி வருகின்றாரோ அவருக்கே பிரம்மா அறிவிக்கிறார். அனைத்து கடவுளரும் ரிஷி புங்கவரும் ஓடோடிச் செல்கின்றனர். விநாயகர் பெற்றோரைச் சுற்றி வந்து மாம்பழம் பெற்றுக் கொள்கிறார். கௌதம மகரிஷியோ காமதேனுவையே சுற்றி வந்து அகலிகையை வெல்கிறார்.
(அகலிகையின் விருப்பம் பற்றியெல்லாம் கேட்கவேண்டாம். இது அந்தக் காலக் கதை.)
ஆனாலும் இந்திரன் விடுவானா? சந்திரனையே சேவல் வடிவெடுத்து அதிகாலை கூவச் செய்து, முனிவரை காட்டிற்குள் அனுப்பி தன் விருப்பத்தைத் தணித்துக்கொள்கிறான். கணவன் வடிவத்தில் வந்திருப்பது தேவாதி தேவன் என்றறிந்தும், தன்னைத்தேடி அவனேவா எனப் பெருமையில் மயங்கி உடன்படுகிறாள் அப்பேதை. அகலிகை தாழ என்பார் கம்பர் அருமையாக.
எல்லாம் முடிந்த பிறகு ஓடி வரும் நம் சினிமா போலீஸ் போல கவுதமர் வருகிறார், சினந்து, “பெண்களைத் தவிர வேறு சிந்தனையே உனக்குக் கிடையாதா..ஒன்றென்ன ஆயிரம் பெற்றுக்கொள்…ஆனால் அவற்றில் எதனையும் நீ பயன்படுத்த இயலாது,” என வக்கிரமாக இந்திரனுக்கு உடலெல்லாம் பெண்குறியாகுமாறு சாபம் விடுக்கிறார். பின்னர் சூரியனை/சிவனை நோக்கி கடுந் தவம் செய்து குறி கண்ணாக வரம் பெறுகிறான்.
கல்லான அகலிகைக்கு ராமன் அருள்பாலிக்கிறார்.
இன்னொரு கதையில் கவுதமருக்கும் அகலிகைக்கும் நிறைய பிள்ளைகள் உண்டு. இந்திரன் பத்திரமாகச் சென்ற பின்னரே முனிவருக்கு உறைக்கிறது. தன் பிள்ளைகளில் ஒருவனிடம் தாயைக் கொன்றுவிடுமாறு உத்திரவிட்டுச் செல்கிறார் முனிவர்.
அவனோ எதையுமே உடனடியாக நிறைவேற்றாமல் யோசித்து யோசித்தே கால விரயம் செய்பவன். (ஷேக்ஸ்பியரை அறிந்தோருக்கு ஹாம்லெட் நினைவுக்கு வரவேண்டுமே!)
கவுதமரின் மகன் இப்போது ரொம்பவே யோசிக்கிறான். தாயைக் கொல்வதா? அவரை வழி தவறவிட்டது அனைத்துமறிந்த தந்தைதானே?
கவுதமரும் தவத்தில் ஈடுபட்டிருந்தபோதும் தன் மனையாளை நினைத்து உருகுகிறார். தவறு செய்துவிட்டோமோ? முதற் குற்றவாளி இந்திரன் தானே…விருந்தோம்புவது ரிஷி பத்தினியின் கடமையல்லவா? அந்த நேரத்தை அவன் பயன்படுத்திக்கொண்டான். இவளும் சற்று மயங்கிவிட்டாள். தவறுதான் அதற்காக மரணதண்டனையா?
ஆசிரமத்திற்கு ஓடோடித் திரும்புகிறார். மகன் கத்தியுடன் இன்னமும் நிற்கிறான். தந்தையைக் கண்டதும், கத்தியைக் கீழே போட்டுவிட்டு, தந்தையின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோருகிறான்.
பரவாயில்லை. நானே என் முடிவை மாற்றிக்கொண்டேன். நீ தண்டனையினை நிறைவேற்றாததிலும் எனக்கு மகிழ்ச்சியே எனக் கூறி அவனை ஆரத் தழுவிக்கொள்கிறார் முனிவர்.
ஆனாலும் நீண்ட நாள் கழித்து மகனுடன் கவுதமர் சுவர்க்கம் செல்கிறார், அகலிகையின் கதி என்ன என்று மகாபாரதம் விளக்கவில்லை.
’வழி தவறிய’ பெண்களுக்கு முக்தி அளிக்கும் நம் ராமபிரான், ராவணனால் சிறைபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்ட பிறகு அக்னி பிரவேசம் செய்யும் கதை நம் அனைவருக்கும் தெரியும். மகாபாரதத்தில், “நீ அயலான் வீட்டில், விரும்பியோ, விரும்பாமலோ இருந்திருக்கிறாய். உன்னை எப்படி நம்புவது…யாகத்திற்கான நெய்யினை நாய் நக்கிவிட்டால் நாம் அதனை தூரத்தானே தூக்கி எறியவேண்டும்?
மகாபாரத்தில் மார்க்கண்டேய மகரிஷி இப்படித்தான் நடந்ததாகக் கூறுகிறார்.
ராம் ராம் ராம்
துறவறம் பூணாமலேயே ஒருவர் மரணத்தை வெற்றி கொள்ள இயலுமா? – யுதிஷ்டிரர்
(துறவிகள் என்ன மரணமடைவதில்லையா? – தெரியாது)
துரியோதனனின் அழகிய பெண் மீது மையல் கொண்ட அக்னி பகவான் (இந்தக் கடவுளருக்கு வேறு வேலையே இல்லையா என்ன!!) அவனை சோதிப்பதற்காக ஏழை பிராமணனாக வடிவெடுத்து பெண்ணைத் திருமணம் செய்து தரும்படி கேட்கிறார்.
பஞ்சம் பிழைக்க வந்தவனுக்கு இளவரசியா, நோ நோ என்கிறார் துரியோதனன்.
(அதாவது ஷத்திரியப் பெண்களையும் பிராமணர்கள் மணம் முடிக்கலாம் போலும்…)
புன்னகைத்துக்கொண்டே செல்லும் அக்னி மன்னனின் யாகங்களைப் புறக்கணிக்க, பின்னர் தெரிய வருகிறது கதை. அடடா இதற்கா இப்படி, தாராளமாக என் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று துரியோதனன் சம்மதிக்கிறார்.
இப்படியாக அக்னிக்கும் துரியோதனின் மகளுக்கும் பிறக்கும் மகன் சுதர்ஷணன். அவனை பிராமணனாகவே சித்தரிக்கிறது மகாபாரதம். அவனுக்கும் ஒகாவதி எனும் இளவரசிக்கும் பின்னர் திருமணம்.
இந்த சுதர்ஷணனன் தான் துறவறம் பூணாமலேயே முக்தியடைய முடியும் என நிரூபிப்பவன்.. அதிதி தேவோ பவ, விருந்தாளியைக் கடவுளாக நினைத்து அவர் எது கேட்டாலும் தயங்காமல் கொடுத்துவிடவேண்டும் என தன் மனைவிக்கு உபதேசம் செய்கிறான்.
(அப்போது கூட அழகிய தொடைகளையுடைய என் அருமை நாயகியே என விளிக்கிறான் அந்த பக்தன்..)
மரணத்தை வெற்றிகொள்ளும் முயற்சியில் இறங்கி, கிருஹஸ்தனாகவே இருந்தாலும் அனைத்து நெறிகளையும் கடைபிடித்து, தீவிர பக்தியும் கொண்டிருக்கும் அவனை இப்படியே விட்டுவிட்டால் நம் கதி, மற்ற பலரும் அவனைப் பின்பற்றக் கூடுமே என சஞ்சலம் கொண்ட மரண தேவன், வழக்கம்போல் கணவன் வெளியே சென்ற நேரத்தில், விருந்தாளியாக நுழைய, அப் பெண்ணும் அனைத்து உபசாரங்களையும் செய்கிறாள். போதாது, போதாது, நீதான் வேண்டும் என அந்தக் கபடவேடதாரி அடம்பிடிக்க, அதனாலென்ன எடுத்துக்கொள்ளுங்கள், அதுதான் என் பர்த்தாவின் ஆக்ஞை என அப்பெண்ணும் மகிழ்ச்சியுடன் உடன் படுகிறாள்.
சுதர்ஷணன் வீடு திரும்பும்போது வழக்கம்போல் ஓடிவந்து மனைவி பாதங்களைக் கழுவித் தன்னை தொழவில்லையே என்று வேதனையுற்ற அவன், ஒகாவதியை அழைக்கிறான். அவளுக்கோ வெட்கம். ஆனால் அதிதி பிராமணன், தம்பி நான் உள்ளே இருக்கிறேன். என்னை சிறப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறாள் உன் பார்யாள் என்று பதில் வருகிறது. அந்த நேரம் சுதர்ஷணன் ஏதாவது ஆத்திரப்பட்டால் அவனை அப்படியே ஒரே போடாகப் போட்டு தன்னுடன் அழைத்துச் செல்வது என்பதுதான் மரண தேவனின் திட்டம். ஆனால் சுதர்ஷணனோ சினத்தை வென்றவன், தர்ம நெறிப்படியே ஒழுகுபவன், எனவே, “அப்படியா மகிழ்ச்சி…தாங்கள் இன்புற்றிருந்தால் அது என் பேறு என்கிறான்.”
புளகாங்கிதமடைந்த கடவுள், ஆஹா நீ அல்லவோ பக்தன்…உனக்கில்லாமல் முக்தி வேரு யாருக்கு…உன் சொற்படி நடந்து கொண்ட ஒகாவதியின் ஒரு பகுதி ஆறாக மாறி இவ்வுலகை செழிக்கச் செய்யும்…இன்னொரு பகுதியுடன் நீ சுவர்க்கம் புகலாம்,” என அருள் பாலிக்கிறார்.
அக்னி என்றல்ல வருண பகவானும் அப்படித்தான். அடுத்தவன் மனைவியையே கவர்ந்து சென்று விடுகிறார். அவரிடமிருந்து படாத பாடுபட்டு, வருணனுக்குத் தேவையான நீர் நிலைகளை வற்றச் செய்துதான் முனிவர் மனைவியைத் திரும்பப் பெற முடிகிறது.
தசரதனுக்கு 60,000 மனைவிகள். கிருஷ்ணருக்கு 16,000மாம். தலையாயவர் ருக்மணியாம். ருக்மணிக்குப் பிறந்த பிரத்யும்னனுக்கு கிருஷ்ணன் கூறும் கதை இது.
துர்வாசர் கிருஷ்ணருடன் சில காலம் தங்கியிருக்கிறார். சிறப்பாக உபசாரமெல்லாம். திடீரென்று தன் ரதத்தில் குதிரைக்கு பதிலாக ருக்மிணியைப் பூட்டி இழுத்துச் செல்கிறார். கிருஷ்ணர் வாய் திறக்கவில்லையாம். துர்வாசர் பிராம்மணோத்தமராயிற்றே…கோபம் வேறு பிரசித்தம்.
ஓர் இடத்தில் தடுமாறுகிறார் ருக்மணி. சவுக்கால் விளாசிவிட்டு கீழே குதித்து நடக்கத் துவங்குகிறார் முனிவர். அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த கிருஷ்ணருக்கு இப்போதுதான் கவலை. அவருக்கு துர்வாசர் செல்லவேண்டிய இடம் தெரியும், ஆனால் முனிவர் நடைபோடுவதோ எதிர்த் திசையில். ஓடிப்போய், “சுவாமி…க்ஷமிக்கணும்..நீங்கள் போகவேண்டிய திசை இதுவல்ல என்கிறார்,” மென்மையாக.
ஆத்திரம் அடங்குகிறது. மகிழ்ச்சி பெருகுகிறது. ”பக்தா மெச்சினோம் உம் விசுவாசத்தை. இந்தா பிடி வரங்களை…”
ஆண்டவனுக்கே அல்வாதான்…
பிராமணரென்றால் அவ்வளவு மரியாதை…சக்தியும் கூட..அதுதான் கதையின் தத்துவம்
அந்தக் காலத்தில் பெரியார் கூட்டங்களுக்குப் போவவேன். கருத்தியல் ரீதியான உடன்பாடென்று சொல்லமுடியாது இன்னமும் ஏதும் பிடிபடாத நிலை. மற்ற அரசியல் கூட்டங்களுக்குப் போவதைப் போல் தஞ்சை திலகர் திடலில் அவரையும் கேட்க. போனஸ் அஸ்வமேத யாகம் போன்றவற்றை அவர் வர்ணிப்பது.
அவருக்கு வியாசரின் கதை தெரிந்திருந்தால் வெளுத்து வாங்கியிருப்பார். கடும் தவம் மேற்கொண்டு இறைவனின் ஆசியைப் பெற்றும், ‘அந்த’ விஷயத்தில் நம்மாள் சற்று வீக்.
அக்னி வளர்க்கையில் ஆகாயத்தில் பறந்து செல்லும் அப்சரசுகளைப் பார்த்து மூட் வந்து விடுவிகிறது. விந்து அக்னியில் விழுகிறது. ஆனாலும் அதிலிருந்து எழும் ஷுகா பெரும் தபஸ்வியாக உருவாகிறான். அவன் மறுவுலகை எட்டும் நேரம் வியாசர் இன்னமும் பூமியில்.
ஷூகாவின் பயணத்தின்போது தேவலோக கன்னிகைகள் குளித்துக்கொண்டிருக்கின்றனர். அவனைக் கண்டு கொள்ளவில்லை.
தன் மகன் அனைவரின் வாழ்த்தொலிக்கிடையே மறு உலகம் புகும்போது அவனது அப்பயணத்தையும் கண்டு களிக்கிறார் வியாசர். ஆனால் அவரைக் கண்டவுடன் கன்னிகைகள் அலறிப் புடைத்துக்கொண்டு தங்கள் உடைகளை எடுத்துக்கொள்ள ஓடுகின்றனர்.
மகன் மீதிருந்த நம்பிக்கை தந்தை மீதில்லை. வெட்கப்படுகிறார் வியாசர். இன்னமும் ஆசாபாசம் முழுவதுமாக விடவில்லை எனவே பூமியில் தன் காலம் தொடர்கிறது என உணர்கிறார் வியாசர்.
கடும் பஞ்சத்தில் சிக்கிக்கொள்ளும் விசுவாமித்திரர் எங்கெங்கோ அலைந்தும் உண்ண ஏதும் கிடைக்காமல் மிக இழிந்த சாதியினரான சண்டாளர்களின் கிராமமொன்றை சென்றடைகிறார். அங்கே ஒரு குடிசையில் நாய் மாமிசம் உலறப்போட்டிருப்பதைக் கண்டு நா ஊறுகிறது. பிராமணன் தான், மாமிசம் புசிக்கக்கூடாதுதான், அதுவும் புலையனிடமிருந்து திருடி, ஆயின்…என்ன செய்ய, ஆசை வெட்கமறியாது. மேலும் உயிர் வாழவேண்டுமே.
ஆபத்துக்குப் பாவமில்லை. அத்தகைய சந்தர்ப்பங்களில் முதலில் தனக்குக் கீழானவரிடமிருந்தும், பின்னர் சமமானவரிடமிருந்தும், அதன் பின்னர் தன்னைவிட உயர்வானவர்களிடமிருந்துங்கூ எதனையும் பெற்றுக்கொள்ளலாம், இப்படியாக சமாதானம் சொல்லிக்கொண்டே இரவில் நாய் மாமிசத்தை எடுக்க முயல்கிறார். வேடன் கண்டுவிடுகிறான். நீ உயிரோடு போகப்போவதில்லை என கர்ஜிக்கிறான்.
”அப்பா, நான் முற்றுமுணர்ந்த முனிவனாக்கும். அதுவும் விசுவாமித்திரன் கேள்விப்பட்டிருக்கிறாயா…என் மகத்துவத்தை உலகே அறியும்…”
”சரி அப்பட்டிப்பட்ட நீரா இப்படித் திருடி, அதுவும் நாயின் பின்பகுதியை…நாங்களே தொடக் கூசுவோமே..”
சரி ஆபத்துக்கென்ன செய்ய…சாப்பிட்டு பல நாட்களாயிற்று…இதுவும் இல்லையென்றால் செத்துவிடுவேன், நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று துண்டங்களை மடியில் கட்டிக்கொண்டு மனைவியை நோக்கிச் செல்கிறார் மகரிஷி.
மகாபாரதமும் இதனை நியாயம் என்கிறது. சண்டாளனின் கதி என்ன என்பதை மட்டும் சொல்லாமல் தவிர்க்கிறது. கலியுகத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறார் பீஷ்மர் யுதிஷ்டிரரிடம்

