சிறு விவசாயிகளும் உலகப் பொருளாதாரமும்
அபாயகரமானதொரு கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் பேராசியர் மரியம் இஸ்லானி
நான் தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவன். ஆனால் தஞ்சையின் சிறப்பு அம்சங்களாகக் கருதப்படும் விவசாயம் மற்றும் கர்நாடக சங்கீதம், இரண்டிற்குமே அப்பாற்பட்டுத்தான் வளர்ந்தேன்.
நகரத்திலேயே வாழ்க்கை. எனவே கிராமப்புறம் பற்றி ஏதும் தெரியாது. சங்கீதத்திலாவது ஒரு கட்டத்தில் பிடிப்பு ஏற்பட்டது, ஆனால் விவசாயம் அந்நியமாகவே இருந்துவிட்டது.
செய்தியாளனான பின் ஓரளவாவது தெரிந்து கொள்ள முயன்றேன். ஆனால் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கையில் எதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு? மேலும் சென்னை வாசம், அரசியல் இப்படியாகிவிட்டது. ரொம்பவே வருத்தம்.
என் ஒரே மகனாவது விவசாயப் பொருளாதரத்தை நன்கு கற்று, சமூகத்திற்குப் பயன்டுவான் என விரும்பினேன். ம்…நிராசைகளான பலவற்றில் அதுவும் ஒன்றாகிவிட்டது.
வாழ்வின் கடைசிக் கட்டத்தில் நான் செய்யக்கூடியது - விவசாயம் குறித்த செய்திகளை தீவிரமாகப் படித்து, பகிர்வதுதான்.
நேற்று இணைய தளத்தில் உலக விவசாயம் பற்றி, குறிப்பாக விவசாயத்தை மட்டுமே நம்பி ஜீவிக்கும் மக்கள் குறித்த விரிவான கட்டுரை கண்டேன். அதில் சில பகுதிகளை நண்பர்கள் அறியவென சுருக்கித் தருகிறேன்.
மரியம் அஸ்லானி, ஆக்ஸ்ஃபர்ட் பல்கலையில் பணியாற்றும் இவர் பல நாடுகளிலும் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்.
ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் ஏறத்தாழ இருநூறு கோடிமக்களுக்கு விவசாயம்தான் ஜீவாதாரம் என்கிறார் அஸ்லானி. பெரும்பாலும் சிறு விவசாயிகளே.
தொழிற்புரட்சிக்குப் பிறகும், 300 ஆண்டுகளாக உலக மக்கட் தொகையில் 25 சதமானோர் இந்த வகைப் பட்டோரே. தொழிலாளர்கள், தகவல் தொழில் நுட்பம் அல்லது சுரங்கங்கள், தொழிற்சாலைகள், உதிரிகள், இவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம் சிறு விவசாயிகள் தொகை.
பத்து ஏக்கருக்கும் குறைவான நிலபுலன்களில், குடும்பத்தினருடன் கடுமையாக உழைத்துப் பிழைப்பவர்கள் அவர்கள்.
மேற்குலக விவசாயப் பண்ணைகளின் கதை வேறு. மூன்றாம் உலக விவசாயிகளின் நிலை இன்னமும் பரிதாபமாய்த்தான் இருக்கிறது. வாழ்க்கைக்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது.
ஆனால் அவர்கள் உலகப் பொருளாதரத்துடன் ஒன்றுபடுத்தப் பட்டிருக்கின்றனர். நமக்கு அத்தியாவசியமாக கருதப்படும் கோகோ, பஞ்சு, சர்க்கரை மற்றைய விவசாய விளை பொருள்கள் அவர்களை நம்பித்தான்
சிறு விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை நம்பியே நம்மில் 70 சதமானோர்க்கு அன்றாட உணவு.
சிறு விவசாயமே மண் வளத்தைக் காக்கிறது. சரியான முறையில் மேற்கொள்ளப்படும் விவசாயம்தான் ருவநிலை மாற்றங்களிலிருந்தும் பிரபஞ்சத்தினைக் காக்கிறது. பாரதி ஒரு கட்டுரைத் தொகுப்பினை நம்மை ரஷிக்கும் விவசாயப் பெருமக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
இத்துறை மட்டும் சரியாக இயங்காவிடின் உலகப் பொருளாதாரமே சீர்குலையும் என எச்சரிக்கிறார் மரியம் அஸ்லானி.
போகோ ஹராம் என்பது நைஜீரியப் பகுதிகளில் இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு. சஹாராவில் பருவநிலை மாற்றம், விரியும் பாலைவனம், விளைவாய் ஜீவிதம் இழக்கும் மக்கள், இவர்களே போகாவின் பிரச்சாரங்களுக்கு இரையாகி, தம் மக்களையே பல அடாத செயல்களுக்கும் உட்படுத்தி வருகின்றனர்.
நம் பாரத மணித் திருநாட்டில் இதுவரை நான்கு இலட்சத்திற்கும் மேலான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர், மேலதிகமாக மராட்டியத்தில்.
நியாமான விலை கிடைப்பதில்லை, கடனில் மூழ்கி தூக்கிலிட்டுக்கொள்கின்றனர் அல்லது விஷ மருந்து.
அரசுகளோ பெரும் நிறுவனங்களுடன் கைகோர்த்து இவ்விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன. குமுறும் எரிமலை வெடிக்கும்போது எவர் மிஞ்சப்போகின்றனர்?
விவசாயத்தை தொழிற்மயமாக்க முடியும்தான். ஆனால் அதிலும் நெற்பயிர் தனியொரு ரகம். பெரும் பண்ணைகளாக நெற்பயிரிடும் நிலங்கள் இயங்கவியலாது. அதிக உடலுழைப்பு, ஒட்டுமொத்தக் குடும்பத்தினரின் பங்களிப்புதேவைப்படுகிறது. சிறு விவசாய நிலங்களில்தான் நெல் சிறப்பாக விளைகின்றது.
என்னதான் பெரு வணிக நிறுவனங்கள் முட்டி மோதினாலும், அரிசி உற்பத்தியாளர்கள் பெருமளவில் 50 கோடி சிறு விவசாயிகளே.
பருத்தியில்கூட மெகா பண்ணைகள் உருவாகிவிட்டிருந்தாலும் கூட, தரம் திருப்திகரமானதாயில்லை, எனவேயே பருத்தியிலும் சிறு விவசாயத்தின் பங்கு இன்றுமதிகம். சீனத்திலும், இந்தியாவிலும் உற்பத்தியாகும் நெல்லும், பருத்தியும்தான் உலக சந்தைகளில் முன்னிலை வகிக்கின்றன.
இந்திய பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது பாஞ்சாலம்தான். ஆனால் அங்கு இன்றைய நிலை என்ன? உரத்தில், களைக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு இராசயனப் பொருட்களின் விளைவாய், நிலமும் நீர் நிலைகளும் பாழ்பட்டிருக்கின்றன.
ஆப்பிரிக்காவில் கோகோ உற்பத்தியாளர்கள், 1970கள்வரைகூட சாக்லேட் விலையில் 50 சதம் ஈட்டி வந்தனர் ஒரு தசாப்தத்தில் அது 16 சதமாக வீழ்ந்தது. இன்றோ ஆறு சதம் கூட தேறாதென்கிறார் மரியம்.
சாக்லேட் தொழிலில் நிறுவனங்கள் நூற்றுக்கோடி டாலர் கணக்கில் இலாபம் ஈட்டுகின்றன. ஆனால் நெற்றி வேர்வை நிலத்தில் வழிய உழைக்கும் விவசாயிக்கோ ஆண்டுன்றுக்கு 300 டாலர் கூட கிடைப்பதில்லை
ஒரு காலத்தில், கானா மற்றும் ஐவரிகோஸ்ட் சாக்லேட் பண்ணைகளில் வேலை செய்யவேன மேற்காப்பிரிக்காவெங்கிருந்தும் மக்கள் குவிவார்கள். இன்றொ அவ்விரு நாடுகளிலிருந்தும், அபாயகரமான பயணங்களை மேற்கொண்டு, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிழைப்பு தேடி விழைகின்றனர். இவர்களெல்லாம் டிரம்ப் உள்ளிட்ட கொடுங்கோலர்களால் கடும் தண்டனைக்குள்ளாக்கப்படுகின்றனர்.
இப்போதெல்லாம் விவசாயம் ஜீவாதாரமாய்கூட இருப்பதில்லை. தம் நிலங்களைச் சுற்றி தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர், அவ்வளவுதான். கிடைக்கும் நேரத்தில் அண்டை அயலிலுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். சிறு சிறு உப தொழில்களில் ஈடுபடுகின்றனர். குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் அனுப்பும் பணத்தை வைத்து காலத்தை ஓட்டுகின்றனர்.
சீனத்து அதிசயம் அங்கே கிராமப்புற மக்கட் தொகை 80 சதமாக அண்மைக்காலம் இருந்தது போக, இப்போது அது வெறும் 35 சதமாகக் குறைந்திருக்கிறது. இந்தியாவிலோ 65 சத மக்கள், 900 மில்லியன் மக்கள் கிராமங்களில்தான் இன்றும்.
அதே நேரம் தொழிற்சாலைகளில், சுரங்கங்களில் உலகெங்கும் பணியாற்றுவோரின் மொத்த எண்ணிக்கை 800 மில்லியன்தான் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சிறு விவசாயிகளை, அவர்களை அண்டி வாழும் கிராமப் புறத்தினரை நகர மயமாக்குவதுதான் எங்கனம்?
எப்படியும் நகரமயமாக்கலை மட்டுமே முன்னேற்றத்தின் அளவுகோலாகக் கருதுவது தவறு. விவசாயம் தேங்க, சீரழிய, விவசாயிகளும், மற்றோரும் நகரங்களுக்குப் படையெடுக்க, நரகம்தான் உருவாகிறது.
பருவநிலை மாற்றங்களின் விளைவாய் மென்மேலும் வறியராகி, அகதிகளாக, வாழ்வைத் தொலைப்போரின் எண்ணிக்கை 2050ல் 25 மில்லியனிலிருந்து நூறு கோடி என்றாகும் என எச்சரிக்கிறது ஐநா. டிரம்போ பருவநிலை மாற்றமென்பது வெறும் பம்மாத்து என்று ஐநா மேடையிலேயே கொக்கரிக்கிறார்.
கொடுமையை எங்கு சொல்ல? எப்போதாவது தீர்வு ஏதேனும் நம் உழவர் பெருமக்களுக்குக் கிடைக்குமா, என்ற ஏக்கத்துடன் கட்டுரையை முடிக்கிறார் மரியம் அஸ்லானி.
https://aeon.co/essays/the-planet-and-human-social-life-depend-on-peasant-farmers