ஸ்டாலினும் பெரியாரும்
தீவிர ஆதரவாளர்கள் அத்தலைவர்களை விமர்சிப்பதை கவனமாகத் தவிர்த்து, புளகாங்கித முழக்கங்களை மட்டுமே எழுப்புகின்றனர்.
ஸ்டாலினும் பெரியாரும்
இந்தித் திணிப்பை எதிர்க்கையில், சோவியத் யூனியன் சீர்குலைந்து சின்னாபின்னமாவதற்கு ரஷ்ய மொழித் திணிப்பும் ஒரு முக்கிய காரணம் எனத் தமிழக முதல்வர் சொல்லப்போக, கொதித்தெழுந்து விட்டனர் காம்ரேடுகள்.
மேற்கு வங்கம் பர்த்வானில் 1968ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாநாடு தொடங்கி தொடர்ந்து சிபிஎம் தங்கள் ஆதர்ச புருஷர் ஸ்டாலினுக்கு செவ்வணக்கம் செலுத்தி வருவதை தோழர்கள் ஆவேசத்துடன் மீண்டும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
தனி நபர் வழிபாடு என்று கதை கட்டி சொக்கத் தங்கமான சோஷலிச வரலாற்றைத் திரிக்கவேண்டாம். ஸ்டாலின் மட்டும் அன்று அதிகாரத்திலில்லாமலிருந்தால் ட்ராட்ஸ்கியிடமிருந்து, பன்னாட்டு பணமுதலைகளின் ஆதிக்கத்திலிருந்து, இறுதியாக ஹிட்லரிடமிருந்து சோவியத் யூனியனைக் காப்பாற்றியிருக்க முடியுமா என்ற ரீதியிலான சப்பைக் கட்டுகள்.
ஒருவர் போட்டாரே ஒரு போடு - பன்னாட்டுக் கண்டனங்களுக்குள்ளான ஸ்டாலினின் களையெடுப்புக் கொலைகள் பலவற்றுக்கும் குருஷ்சாவும் அவரது சகாக்களும்தான் பொறுப்பு. தேர்தல்களில் ரகசிய வாக்கெடுப்பினை அமல்படுத்தவிருந்த திட்டத்திற்கு வேட்டு வைக்கவே அவர்கள் அத்தகைய அக்கிரமங்களில் ஈடுபட்டனர், ஏனெனில் அவ்வாறு ரகசிய வாக்கெடுப்பு நடந்திருந்தால் அவர்கள் பொதுவாழ்விலிருந்தே அகற்றப்பட்டிருப்பர். அவர்களது சதித் திட்டத்திற்கு பாவம் ஸ்டாலின் பலியாகிவிட்டார் இப்படிச் செல்கிறது அவரது கண்டுபிடிப்புக்கள்.
பர்த்வான் 1968ல். ஸ்டாலினை அம்பலப்படுத்திய குருஷ்சாவ் பதவியிலிருந்த்து அகற்றப்பட்டு நான்காண்டுகள். மேற்குலகிற்கும் சோவியத் யூனியனுக்குமிடையே பனிப்போர் வேறு வலுத்துக்கொண்டு வந்தது. அந்நிலையில் பல்வேறு குழப்பங்கள், விவாதங்கள், முழுமையான தகவல்கள் இல்லாத நிலையில் அப்போது ஸ்டாலினைத் தூக்கிப்பிடித்ததை ஓரளவேனும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆயின் அனைத்தும் முடிந்து போய், ஆவணங்கள் பகிரங்கமாகி, ஸ்டாலினின் கொடூரம் மிகத் துல்லியமாக நமக்குத் தெரிந்த பிறகும் ஏன் இப்படி காம்ரேடுகள் அடம்பிடிக்கின்றனர்?
ட்ராட்ஸ்கி நாடு கடத்தப்பட்டும், அவர் தொடர்ந்து விமர்சித்து வந்த போது, சில காலம் ஃபிரான்சில் வாழ்ந்தார். அப்போது அவர் வெளியேற்றப்படவேண்டும் என முழக்கமிட்டவர்கள் அந்த ஊர் கம்யூனிஸ்டுகள்.
களையெடுப்பு படலம் குறித்து முழு விவரம் தெரியாவிடினும், நெஞ்சு பதறவைக்கும் தகவல்கள் கசிய, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் போன்றோர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தபோதும் எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டு கொள்ளவில்லை, மாறாக ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்கவே செய்தனர்.
சமூக நீதிக்காக தம் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்தவர்கள் ஸ்டாலினின் கொடுமைகளை நியாயப்படுத்தியது ஏன்?
நம் சீனிவாசராவுக்கு விவசாயத் தொழிலாளர் நலனை மேம்படுத்தலே உயிர் மூச்சாக இருந்தது. ஆனால் அவர் தனது தலைமறைவு வாழ்க்கையில் எழுதிய கடிதமொன்றில், மாஸ்கோவை ஏதோ சொர்க்கபுரி போன்று சித்தரிக்கிறார், வேறெங்கும் விட அங்கேதான் மக்கள் அனைத்து சுதந்திரங்களுடன் வாழ்வதாகக் குறிப்பிடுகிறார்.
அப்படித்தான் சிந்திக்கச் சொல்லும், பேசச்சொல்லும் ஒரு கருத்தியல் மீது கொள்ளும் மாளாப் பற்று.
லெனின் காலத்தில் துவங்கிய அரசு பயங்கரவாதம் ஸ்டாலின் ஆட்சியில் உக்கிர தாண்டவம் ஆடியது. லெனினாவது தன் சொந்த நலனுக்காக, தன் தலைமையைத் தக்கவைத்துக்கொள்ளவென அரசு பயங்கரத்தைக் கட்டவிழ்த்துவிடவில்லை. அவரிடம் மேலதிகப் பெருந்தன்மை இருந்தது. தன்னுடன் முரண்பட்டோருடன் கூட நல்லுறவு பேணினார், அவர்கள் கட்சியில் உயர்ந்த பதவிகளில் தொடர்ந்திருந்தனர். ஸ்டாலின் தலைமை மிக ஆபத்தானது என்பதை அவர் உணர்ந்த போது காலம் கடந்திருந்தது.
கட்சியில் கைக்கொண்ட ஜனநாயகத்தை லெனின் பரந்து பட்ட மக்களுக்கு மறுத்தார், எனவேயே சோஷலிச அரசும் வக்கரித்ததென்பார் லூயி ஃபிஷர்..
ஏன் இந்தப் புரிதல் எந்நாட்டுத் தோழர்களுக்கும் வரவில்லை என்பது ஒரு புரியாத புதிர்தான். அன்றிலிருந்து இன்றுவரை ஸ்டாலின் எனும் அம்சத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கம்யூனிஸ்ட் கட்சிகள் உழைக்கும் மக்களின் குரலாக இருந்து வந்திருக்கின்றன என்பதை மறுக்கவியலாது.
அவர்களோ தங்களின் இருநிலைப்பாட்டால் நம்பகத்தன்மை வெகுவாகக் குறைகிறது என்பதை ணர்வதில்லை. நம்பாதவர்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள், நம்புவதற்கென்று ஒரு பிரிவு இருக்கத்தானே செய்கிறது, அது போதும் என்ற ரீதியில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் கம்யூனிச அமைப்புக்கள் செயல்படுகின்றன.
அ.மார்க்சின் நிறப்பிரிகை பெரியாரியம் குறித்து ஒரு கலந்துரையாடலை 1993ஆம் ஆண்டு மதுரையில் ஏற்பாடு செய்திருந்தது. அவர்களது சிறப்பிதழ் ஒன்றில் வழக்கம்போல் அதைச் சொன்னார் பெரியார், இதைச் சொன்னார் பெரியார், அவரைத் தாண்டிய புரட்சி சிந்தனையாளர் எவருமில்லை என்ற ரீதியில் கட்டுரைகள். அவ்விதழை மையப்படுத்தி நடந்த விவாதத்தில், நானும் கலந்து கொண்டு, சில கருத்துக்களைச் சொன்னேன்: பெரியாரை ஏதோ சர்வரோக நிவாரணி போல சித்தரிப்பது தவறு. பெண் நிலை, தலித் மக்கள் அவலம், பகுத்தறிவு எனப் பலவற்றைக் குறித்துப் பேசியிருக்கலாம், வலியுறுத்தியிருக்கலாம், ஆனால் பார்ப்பன மேலாதிக்கத்தைத் தகர்ப்பதில் காட்டிய ஆர்வத்தை அவர் மற்ற தளங்களில் காட்டவில்லை, இன்னுஞ்சொல்லப்போனால் கலைஞர் தலைமையில் தத்துவமும், இயக்கமும் சீரழிந்துகொண்டிருந்தபோது இவர் நம்மவர் என்று வாரியணைத்து அவருக்கு ஆசி கூறினார்.. இடைநிலை சாதியினரின் ஒடுக்குமுறைகளை அவர் கண்டும் காணாமல் சென்றார், பெண் விடுதலையெல்லாம் அவரது கட்சித் தலைவர்களாலேயே அலட்சியப்படுத்தப்பட்டது, இத்தகைய விமர்சனங்களை முகங்கொள்ளாமல் பெரியாரியமே எல்லாவற்றுக்கும் தீர்வு எனப் பேசுவது நமது நம்பகத் தன்மையினைக் குலைக்கும் என்றேன்.
உடனே குறுக்கிட்ட ஒருவர், “அந்த நம்ம யாரு சார்,” என்று வினவினார். நான் ஒரு பார்ப்பனன் என்பதை மறைமுகமாகக் கிண்டல் செய்தவர், அத்தகையோரின் நம்பிக்கை எமக்குத் தேவையில்லை என்றார். அது தான் அங்கிருந்த மற்றவர்களின் கருத்தும் கூட.
இத்தகைய நிலைப்பாட்டினையே நாம் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் காணமுடிகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேல் ஆட்சி செய்த மேற்கு வங்கத்தில் இவர்களை இன்று கண்டு கொள்ளவே ஆளில்லை. கேரளத்தில் மட்டும் இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த அளவு தேய்ந்து போனது ஏன் என்பது குறித்து விவாதிக்க மறுக்கின்றனர். விமர்சனம் செய்வோரின் உள்நோக்கத்தை கடுமையாக சாடுகின்றனர்.
என்று மடியும் இந்த மௌடீகம்?


